பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை
தமிழ்குறிஞ்சி இணையதளத்தில் காணலாம்.
இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவி கள் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும்.
1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.
1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
வெளி மாவட்ட மாணவர்கள் சாதனை:
சென்னை மாணவர்கள் யாரும் முன்னணி இடங்களைப் பெறவில்லை. அனைத்து இடங்களையுமே வெளி மாவட்ட மாணவர்கள்தான் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மார்ச் மாதம் நடந்த பிளஸ்டூ தேர்வை ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவுகள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தன. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி முடிவை வெளியிட்டார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு:
மெட்ரிக் தேர்வில் சென்னை டிஏவி பள்ளியைச் சேர்ந்த மாணவி அனு 1,188 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே பள்ளி மாணவி சாரிணி 1,187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.