
லக்னத்துக்கு 2-ஆமிடத்தில் சனி உச்ச ராசியில் இருப்பது விசேடமாகும். சனி குருவின் பார்வையில் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. நாடு நல்ல முன்னேற்றத்தை அடையும். மக்கள் விட்டுக் கொடுத்து இணக்கத்துடன் நடந்து கொள்வர். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். உணவு, ஜவுளி உற்பத்தி அமோகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். வேலையில்லா திண்டாட்டம் ஓரளவு குறையும். பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறக்கும். புதிய பெண் தலைவர்கள் உருவாவர். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணக்க நிலை இருக்காது. அரசியல்வாதிகள் நேர்மையைப் பின்பற்றும் கட்டாய சூழல் உருவாகும்.
லக்னாதிபதியும் தொழில் வீட்டோனுமான புதன் பலம் குறைந்து, 3-ல் பகை வீட்டில் அமர்ந்து ராகுவுடன் கூடியிருப்பது குறை ஆகும். இதனால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். அயல்நாட்டு வர்த்தகம் அதிகரிக்கும். தகவல் தொடர்பு இனங்களில் அபிவிருத்தி காணலாம். நம்நாட்டு வர்த்தகத்தில் வெளிநாட்டவரின் முதலீடு அதிகரிக்கும். விரயாதிபதி சூரியன் 4-ல் இருப்பது சிறப்பாகாது என்றாலும் குரு பார்வையில் இருப்பதால் விளைச்சல் கூடும். விலைவாசி ஓரளவுக்குக் குறையவே செய்யும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பதவி இறக்கம் ஏற்படும்.
2, 9-ஆம் இடங்களுக்குரிய சுக்கிரன் 5-ல் இருப்பதால் கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் அதிகம் வருமானம் கிடைக்கும். டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் சூடு பிடிக்கும். பெண்களின் ஆதிக்கம் வலுக்கும்.
பெண்களால் நாட்டுக்கு சுபிட்சமும் உண்டாகும். பெண்களுக்கு உயர்பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். வருட ஆரம்பத்தில் சந்திரன் 7-ல் ஜல ராசியில் இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். கடல், ஆறு, மற்றும் நீர் நிலைகள் சம்பந்தப்பட்ட இனங்களில் அபிவிருத்தி உண்டாகும். நல்ல மழை பெய்யும். விளைச்சல் அதிகமாகும்.
உணவுப் பொருள் இருப்பு கூடும்.
லக்னத்துக்கு இருபுறமும் பாபக்கிரகங்கள் இருப்பதால் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமாகும். தீ, மின்சாரம், வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படும். நிலநடுக்கம், விண்வெளியில் விளையும் விபரீதங்கள், காற்றால் பரவும் தொற்று நோய்களால் பாதிப்பு, அந்நியர்களால் தொல்லை ஆகியவை ஏற்படும்.
பொதுவாக இந்தப் புத்தாண்டில் மிதுன, சிம்ம, துலா, தனுசு, மீன ராசிக்காரர்களுக்கு 17-5-2012 வரையிலும், அதன்பிறகு மேஷ, கடக, கன்னி, விருச்சிக, மகர ராசிக்காரர்களுக்கும் நற்பலன்கள் உண்டாகும்.
ஒவ்வொருவருக்கும் ஜனன கால ஜாதகம் என்று ஒன்று உண்டு. ஜாதகப்படி சுப யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடப்பவர்களுக்கு இப்புத்தாண்டில் நற்பலன்கள் அதிகரிக்கும்.
கோசாரமும், தசா புக்தியும் சாதகமாக உள்ளவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும்.
கோசாரப்படியும், தசாபுக்திப்படியும் கிரகநிலை சிறப்பாக இல்லாதவர்களுக்குக் கெடுபலன்கள் உண்டாகும்.
அப்படிப்பட்டவர்களும் தெய்வப்பணிகளில் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் கெடுபலன்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். பரிகார சாஸ்திரம் என்பதே அதற்காகத்தானே. கிரகப் பிரீதி செய்து கொள்ளலாம். எனவே எதற்கும் கவலைப்பட வேண்டாம்.
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பலனும் பரிகாரமும் காண இங்கே கிளிக்கவும்
No comments:
Post a Comment