புகைப்படம்
கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன.
கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாக தமிழ் மக்கள் மீது இரசாயணத் தாக்குதல்களை சிறிலங்கா நடத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன.
இதேவேளை, தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை எனக் கூறிவரும் சிறிலங்கா, தொடர்ச்சியாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பகுதியில் செயற்பட்ட மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு சிகிச்சைபெற்று வந்த 64 பேர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்திருந்தவர்கள் உட்பட 87 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், மீண்டும் பாரிய இராணுவ நகர்வொன்றை மேற்கொள்வதற்கு தயாராகியுள்ள சிறிலங்கா இராணுவம், இம்முறை பெரும் அழிவை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய இரசாயண ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது. அவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தஞ்சமடைந்துள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வரையான மக்கள் பெரும் அழிவொன்றினை சந்திக்க நேரிடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக அறிவித்த போர் நிறுத்தத்தை நிராகரித்த சிறிலங்கா, சர்வதேச நாடுகள் விடுத்த வேண்டுகோள்களையும் நிராகரித்து பெரும் அழிப்புத் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment