Saturday, February 7, 2009

"எங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுங்கள்'' சென்னையில் லெஸ்பியன் பெண் பேட்டி

"எங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் தரப்படவேண்டும்'' என்று லெஸ்பியன் பெண் ஒருவர் கூறினார்.

நம்மூரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட பெண்கள் (லெஸ்பியன்கள்) அதிகம் பேர் உள்ளனர். சிலர் திருமணமாகி, குழந்தைகள் பெற்று கணவருடன் வசிக்கும் நிலையிலும் கூட, லெஸ்பியன் உறவை தொடரும் நிலை உள்ளது. இளம் வயது பெண்கள் பலரும் லெஸ்பியன்களாக உள்ளனர். அவர்கள், பெரும் மனப்போராட்டத்தை சந்திக்கிறார்கள்.

இவர்கள், தங்களுக்கு உள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் பற்றி யாரிடமும் தைரியமாக சொல்ல முடியாத நிலை உள்ளது. பல பெண்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள். இவற்றை கருத்தில் கொண்டு, ஆக்ஷன் எய்டு மற்றும் ஐசிடபிள்யுஓ என்னும் தன்னார்வ குழுக்கள், சென்னை அண்ணா நகரில், லெஸ்பியன்களுக்கான உதவி மையத்தை நேற்று தொடங்கின. இங்கு, தொலைபேசி வழியாக, (தொலைபேசி எண் - 65515742) லெஸ்பியன் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், லெஸ்பியன் பெண்களை ஒதுக்க மாட்டோம் என்று மாணவ-மாணவிகளும், மேலும் சிலரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, சென்னையை சேர்ந்த ஒரு லெஸ்பியன் இளம்பெண் கூறியதாவது:-

``சிறு வயது முதலே எனக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது கிடையாது. என்னை ஆணாகவே நான் உணர்கிறேன். எனக்கு 13 வயது இருக்கும்போது பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் எங்களுக்கிடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டது. எங்களது உறவு வீட்டுக்குத் தெரியாது. வீட்டுக்குத் தெரிந்தால் என்னை அடித்து விரட்டி விடுவார்கள். நானும், எனது பெண் சகாவும் அவரவர் வீடுகளில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் வாரத்தில் சில தடவை கண்டிப்பாக சந்தித்து விடுவோம்.

``எங்களில் நான் கணவனைப் போலவும், எனது சகா, மனைவி போலவும் நினைத்து வாழ்ந்து வருகிறோம். நான் எப்போதும் ஆண்கள் போல் உடை அணிவதையே விரும்புவேன். எனது சகாவுடன் வெளியில் போகும்போது, அவளை எந்த ஆணாவது கேலி செய்தால் பாய்ந்து அடித்துவிடுவேன்.

``சில பெண்கள், வீட்டுக்கு பயந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களால், கணவருடன் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. லெஸ்பியன் இளம்பெண்களும், திருமண பந்தத்தில் தள்ளப்படும்போது, பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பெண்கள், தங்களது நிலைமையை வெளியில் சொல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

எங்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படவேண்டும். நான் வேலைக்குச் சென்று சொந்தக்காலில் நிற்கிறேன். நான் எந்த பிரச்சினையையும் சமாளித்து விடுவேன். ஆனால், எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கு, இந்த ஆலோசனை மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும். வெளிநாடுகளில், லெஸ்பியன் பெண்கள், திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோல், இந்தியாவிலும் எங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்று அந்த பெண் கூறினார். மேலும்.....

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...