Monday, February 9, 2009

ஆப்கானிஸ்தானில் தமிழர் சைமன் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் 4 மாதங்களுக்கு முன் தீவிரவாதிகள் கடத்தி பிணைக் கைதியாக வைத்திருந்த விழுப்புரம் இளைஞர் சைமன் ஞாயிற்றுக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பிரம்மகுண்டம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம்-அழகம்மாள் தம்பதி மகன் சைமன்(31). இவர் கடந்த ஜனவரி மாதம் சமையல் வேலைக்கு ஆப்கன் சென்றார். இவரை இவரது அண்ணன் சுப்பிரமணியன் அழைத்துச் சென்றார்.

இத்தாலியின் தனியார் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் சைமன் வேலையில் சேர்ந்தார். அந் நிறுவனம் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இத்தாலி நாட்டு ராணுவ வீரர்களுக்கு உணவு தயாரித்து அளிக்கும் பணியை செய்து வருகிறது.

கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஹேரத் மாவட்டத்தில் பக்ராம் விமானதளத்தில் தங்கியிருந்த சர்வதேச பாதுகாப்பு படையினருக்கு உணவு கொடுக்கச் சென்றபோது சைமனை தலிபான்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். சைமனுக்கு உதவியாகச் சென்ற உள்ளூர் மொழிபெயர்ப்பாளரும், டிரைவரும் கடத்தப்பட்டனர்.

ஒன்றரை லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 75 லட்சம்) கொடுத்தால் அவரை விடுவிப்போம் என்று தீவிரவாதிகள் ஆரம்பத்தில் நிபந்தனை விதித்திருந்தனர்.

அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சைமனின் குடும்பத்தார் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இரக்கம்காட்டி கணவரை விடுவிக்கும்படி அவரது மனைவி வசந்தியும் கடத்தல்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சைமன் உயிரிழந்த சோகத் தகவலை காபூலில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காபூலில் வேலை செய்யும் சைமனின் சகோதரர் சுப்பிரமணியத்தையும் இந்திய தூதரக அதிகாரிகள் திங்கள்கிழமை காலை தொடர்பு கொண்டு சைமன் சாவு பற்றிய தகவலை தெரியப்படுத்தி நேரில் வரும்படி கூறினர்.

வசந்திக்கும் அவரது கணவர் சாவு பற்றி தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சைமனின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அவர் இயற்கையான முறையில் இறந்தாரா அல்லது தீவிரவாதிகளே கொன்றுவிட்டனரா என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சைமன் சாவு தொடர்பாக மேலும் விவரம் அறிய காபூலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் ஹேரத்தில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளும் ஆப்கன் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட சைமனுக்கு மனைவி வசந்தி, நிர்மலா (10), அஜீத் (8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

சைமனின் சடலத்தை ஒப்படைக்கவும் தீவிரவாதிகள் பணம் கேட்பதாகத் தெரிகிறது. இதுகுறித்த தகவல் சைமன் அண்ணன் சுப்பிரமணியன் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. சைமனின் சடலத்தையாவது மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 ஆண்டுகளில் கடத்தல்காரர்கள் கடத்திய 3-வது இந்தியர் சைமன். ஆப்கானிஸ்தானில் எல்லைச் சாலை நிறுவன டிரைவராக பணியாற்றிய எம்.ஆர்.குட்டி மற்றும் பொறியாளர் கே.சூர்யநாராயணன் ஆகிய இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொன்றுள்ளனர். மேலும் செய்திகள்.....

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...