Thursday, March 12, 2009

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 1 கோடி நகை, பணம் கொள்ளை

சென்னை அண்ணா நகரில் தொழிலதிபர் வீட்டில் புகுந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை அண்ணா நகர் இசட் பிளாக் 13-வது தெருவில் வசிப்பவர் அசோக்குமார் மல்பானி (58). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், பாரிமுனை பகுதியில் அலுமினிய மூலப் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக தொழில் செய்துவருகிறார்.

இது தவிர தங்கம், வைர நகைகளையும் வாங்கி விற்று வந்தார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கதவைத் திறந்துக் கொண்டு புதன்கிழமை நள்ளிரவில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே புகுந்துள்ளது.

: இக் கும்பல், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசோக்குமார், அவரது மனைவி லத்தா வாட்டிகா (55), வேலைக்காரர் பச்சன் ஆகியோரை துப்பாக்கி, கத்தி முனையில் மிரட்டியது. இவர்கள் மூவரையும் கட்டிப் போட்டு, வாயில் துணிகளை அடைத்து மயக்க மருந்தை தெளித்துள்ளனர். இதனால் அசோக் குமார் உள்ளிட்ட 3 பேரும் மயக்கமடைந்தனர்.

அசோக் குமாரின் படுக்கை அறையில் இருந்த சாவிக் கொத்தை எடுத்து, பீரோ, லாக்கர் அறையைத் திறந்துள்ளனர்.

லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க, வைர நகைகள், தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை இக் கும்பல் கொள்ளையடித்தது.

இதன்பின் அதிகாலையில் மயக்கம் தெளிந்த அசோக்குமார் தன்னை கயிற்றில் இருந்து விடுவித்துக் கொண்டு மற்றவர்களையும் விடுவித்தார். இதன்பின் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், இணை கமிஷனர் ரவிக்குமார், அண்ணா நகர் துணை கமிஷனர் அன்பு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மயக்க மருந்தால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்து காணப்பட்டதால் போலீசாரிடம் இவர்கள் கொள்ளையர்கள் குறித்து முழுமையாகத் தகவல் தெரிவிக்க இயலாத நிலை உள்ளது. இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராயப்பன் ஏசுநேசர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயின் உதவியுடன் துப்பு துலக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்கள் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. முகமூடி அணிந்த இவர்கள், வீட்டின் வேறு எந்த அறைக் கதவு, பூட்டையும் உடைத்து சேதப்படுத்தவில்லை.

கொள்ளை கும்பலுக்கும், வீட்டு வேலைக்காரர் பச்சனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகள்


பாகிஸ்தான் அதிபர் சர்தாரி எங்கே?

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...