Sunday, March 15, 2009

தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை : கருணாநிதி

முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பிறகு முதன்முறையாக அண்ணா அறிவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த முதல்வர் கருணாநிதி தேமுதிகவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

கேள்வி:தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தீர்களா? அங்கிருந்து ஏதாவது தகவல் வந்ததா?.

பதில்:நான் அழைப்பு ஏதும் விடுக்கவில்லை. தமிழகத்தில் சில பத்திரிகையாளர்களே சேர்ந்து கூட்டணியை உருவாக்குகிறார்கள். அவர்களே, அதை உடைக்கிறார்கள். பின்னர் மீண்டும், இணைக்கிறார்கள்.

கே:நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுகவும்-காங்கிரஸýம் கூட்டணியை இறுதி செய்து விட்டதா?

ப:"இறுதி' என்று கேட்கக் கூடாது. "உறுதி' செய்து விட்டதா என்றுதான் கேட்க வேண்டும். உறுதியாகத் தான் இருக்கிறோம்.

கே:திமுக அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளன?

ப:விரைவில் தெரியும்.

கே: பாமகவில் இருந்து உங்களுடன் தொடர்பு கொண்டார்களா?

ப:பாமகவில் இருந்து யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நாங்களும் தொடர்பு கொண்டு பேசவில்லை.

கே:குலாம் நபி ஆசாத் கூறும்போது, பாமக தலைவர் ராமதாசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். திமுக தரப்பில் இருந்து நீங்கள் ராமதாசுடன் பேசுகிறீர்களா?

ப:பாமக தரப்பில் இருந்து பேசுவதாக சிலர் வந்து பேசுகிறார்கள். அது ஊர்ஜிதமானது அல்ல.

கே: பாமக எங்களது அணியில்தான் உள்ளது. அதைப் பிரித்துப் பார்க்காதீர்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியுள்ளாரே?

ப:தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அக் கட்சிகளின் தலைவர்கள் முயற்சிப்பதும், அதற்கேற்ப பேசுவதும் இயல்பு. ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்களுக்கு உகந்த பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

கே: 3-வது அணி குறித்து...?

ப:3-வது கண் போன்றது.

கே:வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

ப:எங்களது எண்ணமும் அப்படித்தான் உள்ளது.

கே:திமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும்?

ப:இப்போதுதான் காங்கிரஸ் குழுவினருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். எந்தெந்த தொகுதிகள் என்று இன்னமும் வரையறுக்கப்படவில்லை. அப்படி வரையறுக்கப்பட்டால், அது அடுத்த கட்சிகளுடன் பேசுகின்ற நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தும். இனி, தொடர்ந்து நடக்க உள்ள பேச்சுகளில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்பதைப்பற்றி மட்டுமே முடிவு செய்ய இருக்கிறோம். அந்தத் தொகுதிகளின் பெயர்கள் எவை என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கே:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உங்களது அணியில் தொடர்ந்து நீடிக்கிறாரா?

ப:அவர் ரொம்ப காலமாக எங்களது அணியில்தான் உள்ளார். சமத்துவம், ஜாதி மறுப்பு, பொது உடைமைக் கொள்கை ஆகியவற்றில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எங்களுக்கும் முரண்பாடு இல்லை.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள். இலங்கைப் பிரச்னையில், நடைமுறைப்படுத்துவதில் சில வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்களைப் பாதுகாப்பதிலும், அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதிலும், அதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு, சமநிலை ஆகியவை வேண்டும் என்று வலியுறுத்துவதில் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் உள்ள ஒற்றுமையை நீங்கள் அறிவீர்கள். அதற்கு எந்தவித மாற்றமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் கிடையாது என்பதால் அடித்தட்டு மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும் எங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும்.

கே: வழக்கறிஞர் போராட்டத்துக்கு தீர்வு என்ன?

ப: இப்போது, அப் பிரச்னை வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் இடையே நடைபெறும் பிரச்னையாக மாறிவிட்டது.

கே:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக ஜெயலலிதா கூறியுள்ளாரே?

ப:அது எப்போதும் வழக்கமாகச் சொல்வதுதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் அவர் சொல்வது தான்.

கே:பாமக தரப்பில் இருந்து ஒரே நேரத்தில் திமுக அணியுடனும், அதிமுக அணியுடனும் பேச்சு நடத்தப்படுவதாக "மீடியா' செய்திகள் தெரிவிக்கின்றனவே?

ப:அது, "மீடியா' செய்தி அல்ல! "மீடியேட்டர்கள்' (இடைத்தரகர்) கொடுக்கும் செய்தி.

கே:பாமக இறுதியாக திமுக அணிக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

ப:நம்பிக்கைதான் மனிதர்களின் வாழ்க்கை லட்சியம். அது அரசியலுக்கும் பொருந்தும். எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றார் கருணாநிதி.

ராக்கிங் : இளம்பெண்ணை நிர்வாண நடனம் ஆட வற்புறுத்திய 4 மாணவிகள் கைது

தேர்தலில் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...