Saturday, March 28, 2009

டாக்டர் அண்ணனுக்கு 7 தொகுதிகள். அண்ணன், அன்பு சகோதரி சந்திப்பில் உடன்பாடு

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும், ஒரு மேல்சபை பதவியும் வழங்குவது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்று இருந்தது. இந்த தேர்தலில் பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணிக்கு அணி மாறி உள்ளது. பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி ஓட்டெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளது.

தொகுதி பங்கீடு சம்பந்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப்பேச இருப்பதாக பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை 10.40 மணிக்கு போயஸ் கார்டனுக்கு காரில் வந்தார். அவருடன் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி உடன் வந்தார். டாக்டர் ராமதாஸ் வந்த கார் மட்டும் போயஸ் கார்டனுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

டாக்டர் ராமதாஸ் காரில் இருந்து இறங்கியதும், அவரை அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாசலுக்கு வந்து டாக்டர் ராமதாசை வரவேற்றார். இருவரும் பரஸ்பர உடல் நலம் விசாரித்துக்கொண்டனர். ஜெயலலிதாவுக்கு டாக்டர் ராமதாஸ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிறகு டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி ஆகியோரை ஜெயலலிதா வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.

இதன் பின்பு ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் முதலில் கூட்டணி தொடர்பாக பேசி உறுதி செய்தனர். பிறகு தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பா.ம.க.வுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகள் பற்றி டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவிடம் எடுத்துக்கூறினார். டாக்டர் ராமதாசின் கோரிக்கைகளை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு காலை 10.40 மணி முதல் 11.20 வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும், ஒரு மேல் சபை பதவியும் ஒதுக்க ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தொகுதி பங்கீடு பேச்சு வார்தை சுமூகமாக முடிந்தது. ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் 8 வருடங்களுக்கு பிறகு நேற்றுதான் சந்தித்து பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி உடன்பாடு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள 2009-வது பாராளுமன்ற மக்கள் அவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தலை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான இக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை முடிந்ததும் ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் வெளியே வந்தனர். இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். முதலாவதாக ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து நடைபெற உள்ள 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திப்பது என்று உடன் படிக்கை ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அண்ணன் டாக்டர் அவர்களுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 2010-ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்கள் அவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.

இதன் பின்பு டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பு சகோதரியோடு பாட்டாளி மக்கள் கட்சி இன்று கூட்டணி சேர்ந்துள்ளது. இது வெற்றி கூட்டணி ஆகும். புதுச்சேரி உள்ளபட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி சாதாரணமாக வெற்றிபெற போவது இல்லை, மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. தலைமையிலான இந்த கூட்டணி பெற போகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கூட்டணியில் இணைந்ததற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்து பதிலும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு ஏற்பட்டு விட்டதா?

பதில்:- மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் மற்ற கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டுவிடும்.

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் தான் 3-வது அணியில் இல்லை என்று கூறியிருக்கிறாரே?

பதில்:- அ.தி.மு.க. அணியில் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் உறுதிபட கூறியிருக்கிறாரே?

கேள்வி:- தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாற வாய்ப்பு உள்ளதா?

பதில்:- தேர்தல் முடிவுகள் வெளிவரும்வரை காத்திருங்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்ததால் அரசியல் மாற்றம் ஏற்படுமா? தி.மு.க. வெற்றிவாய்ப்பை பாதிக்குமா?

பதில்:- நான் டாக்டர் அண்ணன் அவர்களை 8 வருடத்திற்கு பிறகு சந்திக்கிறேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் வல்லுநர்கள் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணி என்றும் தோற்கடிக்க முடியாத அணி என்றும் வர்ணித்துள்ளனர்.

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி எப்படி உறுதியாக வெற்றிபெறும் என்று கூறுகின்றீர்கள்?

பதில்:- இது பற்றி தேர்தல் முடிவு வரும்போது நீங்களே பார்ப்பீர்கள். இதற்கு மேல் நான் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று ஜெயலலிதா கூறினார்.

பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா-பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
13.5.2009 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்கள் அவைபொதுத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு கீழ்கண்ட பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதன்படி, 1. ஸ்ரீபெரும்புதூர், 2. அரக்கோணம், 3. திருவண்ணாமலை, 4. கள்ளக்குறிச்சி, 5. சிதம்பரம் (தனி), 6.தர்மபுரி, 7.புதுச்சேரி ஆகிய தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்......

ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; 5 ஆண்டுகள் சேலை துவைப்பார் : ராமதாஸ் பற்றி விஜயகாந்த் கிண்டல்

திமுக 21 - காங்கிரஸ் 16: மக்களவைத் தேர்தல் உடன்பாடு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...