Tuesday, March 10, 2009

உண்ணாவிரதம் இருந்ததால் இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியது மத்திய அரசு: ஜெயலலிதா

இலங்கைத் தமிழர்களுக்காக நான் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தால்தான் இலங்கைக்கு மருந்துகள், மருத்துவர்களை மத்திய அரசு அனுப்பியது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எங்கள் உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்களை சுட்டிக்காட்டி, "அதிமுகவினருக்கு கருணாநிதி மீதுதான் கோபம். சிங்கள அரசு மீதோ, மத்திய அரசு மீதோ கோபம் இல்லை' எனக் கருணாநிதி கூறியுள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசு தவறு செய்து இருக்கிறது என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசை, கருணாநிதி தட்டிக் கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாததால், கருணாநிதி ஆட்சி குறித்து உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்கள் மிகவும் பொருத்தமானவையே.

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக அரசு சார்பில் காசோலையாக மட்டுமே பெறப்பட்டது என கருணாநிதி கூறியுள்ளார்.

எங்கள் உண்ணாவிரத மேடையில் உண்டியலில் பணம் போட்டவர்களெல்லாம் அ.தி.மு.க.வினர், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுநர்கள், தினக் கூலிகள், ஏழை, எளியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள். அவர்களெல்லாம் தங்களால் இயன்ற ஒரு ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் என உண்டியலில் செலுத்தினார்கள்.

எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.5 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.1 கோடியும் வழங்கியிருக்கிறேன். தோழமைக் கட்சியினரும் நிதி வழங்கினார்கள்.

உண்டியல் மூலம் வசூலான தொகை வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வசூலான மொத்த பணத்துக்கும் வரைவோலை எடுக்கப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்படும்.

கருணாநிதி அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கிறார். எனவே அவரை சந்தித்து பெரிய தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரைப்படத் துறையினர் காசோலை மூலம் நிதி அளிப்பார்கள். ஆனால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், அத்தகையவர்கள் எங்களிடம் நிதி அளிக்க தற்போது முன்வர மாட்டார்கள்.

கருணாநிதி இவ்வாறு கூறுவதற்கு, இலங்கைத் தமிழர்களுக்காக நான் மேற்கொண்ட உண்ணாவிரதத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டுமின்றி, உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி போயிருப்பதே காரணம்.

"இலங்கைத் தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது'' என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

என்னுடைய அறிக்கையை சரியாக படிக்காமல் வழக்கறிஞர் மூலம் கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

காங்கிரசும், திமுகவும் இணைந்த மத்திய அரசு, இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக வாய் திறக்கவில்லை. இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவியும், பயிற்சியும் அளித்து வந்தது. 2008-ல் போர் தீவிரமடைந்தபோதும் மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்காக கடந்த 9-ம் தேதி நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதை அறிந்து, அதே நாளில் இலங்கைத் தமிழர்களுக்காக 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசர அவசரமாக மத்திய அரசு அனுப்பியுள்ளது.

எது எப்படியோ, நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதாவது மத்திய அரசு உதவியிருப்பதில் மகிழ்ச்சியே.

இலங்கைத் தமிழர்களுக்காக நான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் வரவேற்கின்றனர். கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோர் மட்டும் குறை கூறுகின்றனர்.

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர். இந்த இருவர் மட்டும் எனது உண்ணாவிரதத்தை குறை கூறுவது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே இலங்கைத் தமிழர்களின் எதிரி யார் என்பது தெளிவாகிறது.

இதனால்தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசையும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும் இலங்கைத் தமிழர்களின் எதிரி என்று நான் குறிப்பிடுகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும்.......


தி.மு.க. வக்கீல்கள் அவசர ஆலோசனை


இலங்கையில் `மனித வெடிகுண்டு' தாக்குதலில் 15 பேர் பலி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...