Tuesday, March 31, 2009

அ.தி.மு.க., கூட்டணியில் பிளவு?

அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியாகி உள்ளது. ம.தி.மு.க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள அக்கட்சிகள், கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து யோசித்து வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, தொகுதி ஒதுக்கீடு பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதில், மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர உள்ளது. ஜெயலலிதாவின் அழைப்புக்காக காத்திருக்கின்றனர்.

லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து, இதுவரை 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தே.மு.தி.க., தலைமை அறிவித்துள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணி

ஆனால், அ.தி.மு.க - பா.ம.க - ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் தொகுதி பிரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த அணியில் கடைசியாய் சேர்ந்த பா.ம.க., தேவையான ஏழு தொகுதிகளை கேட்டுப் பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.

ஆனால், கடந்த சட்டசபை தேர்தல் முதலே இந்தக் கூட்டணியில் நீடிக்கும் ம.தி.மு.க.,வுக்கு இன்னும் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. இதேபோல், லோக்சபா தேர்தலுக்காக இந்த அணியில் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை. மேலும், இந்த இரு கட்சிகளும் ஒரே தொகுதியை கேட்டு வருவதாலும் சிக்கல் நீடிப்பதாகத் தெரிகிறது.

இதனால், அ.தி.மு.க., தலைமை மீது இந்த இரு கட்சித் தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என நேற்று முன்தினம் வரை எதிர்பார்த்து காத்திருந்த ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெறுத்துப் போனதுதான் மிச்சம்.

நீண்டநேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜனும் வெறுப்பானார்.

இதனால் தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பினர் கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த பரிசீலனையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

நேற்று காலை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை தொடர்புகொண்டு கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில் ம.தி.மு.க.,வை தங்களுடன் அழைத்து வருவதாக விஜயகாந்திடம் அவர்கள் உறுதியளித்துள்ளனர். அதற்கு விஜயகாந்த், "பிரசாரத்தில் இருப்பதால் இப்போது ஒன்றும் சொல்ல முடியவில்லை; நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு பதில் சொல்கிறேன்' எனக் கூறியதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, அணுசக்தி ஒப்பந்த பிரச்னைக்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் வெளியேறியபோது, அக்கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜன், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார். மூன்றாவது அணியில் சேரும்படி விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தார்.

முதலில் அதற்கு சம்மதம் தெரிவித்த விஜயகாந்த், சில காரணங்களால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். இந்த நிலையில், மார்க்சிஸ்ட்- தே.மு.தி.க., இடையே துவங்கியுள்ள ரகசிய பேச்சால் தமிழக அரசியலில் மீண்டும் அணி மாற்றங்கள் ஏற்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

ம.தி.மு.க: பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்தே போட்டியிட்டு தி.மு.க -அ.தி.மு.க., அணிகளுக்கு சவால் விடுக்கலாமா என்று ம.தி.மு.க.,வும் யோசிக்கத் துவங்கியுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி

தி.மு.க. கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கித்தர முன்வந்தனர். இதனால், மனித நேய மக்கள் கட்சி தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு, தொகுதி ஒதுக்கீடு பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதில், மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.

இதன் காரணமாக அ.தி.மு.க.வில் கூட்டணி சேர மனிதநேய மக்கள் கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பிரச்சினையை முதலில் தீர்த்த பிறகே, மனிதநேய மக்கள் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிவிட்டார்.

இதனால், ஜெயலலிதாவின் அழைப்புக்காக மனிதநேய மக்கள் கட்சியினர் காத்திருக்கின்றனர். அ.தி.மு.க. கூட்டணியிலும், கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் தனித்துப் போட்டியிடவும் மனிதநேய மக்கள் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்து நடக்கிறதென்று பார்ப்போம்.

அன்புமணி பதவியைக் காப்பாற்றவே ராமதாஸ் முயன்றார்: கருணாநிதி

அமெரிக்காவில் தமிழக என்ஜினீயரின் கொடூர செயல் தனது குடும்பத்தில் 5 பேரை சுட்டுக்கொன்றார்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...