Friday, March 27, 2009

எனது கட்சியுடன் கூட்டணிக்காக பல கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் : விஜயகாந்த்

கூட்டணி வைத்துக்கொள்வதற்காக 15 தொகுதிகளும், பல கோடி ரூபாயும் தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று விஜயகாந்த் கூறினார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரசாரத்தை தொடங்கிய அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று நெல்லை மாவட்ட எல்லையான காவல்கிணறு வந்தார். அங்கு அவருக்கு நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் தலைமையில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழி நெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து திறந்த வேனில் நின்றபடி கை அசைத்தவாரே விஜயகாந்த் வந்தார். நெல்லை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை அறிமுகப்படுத்தி வைத்தும், ஆதரவு கேட்டும் பிரசாரத்தை தொடங்கினார். காவல் கிணறு அருகே உள்ள கூட்டப்புளியில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:-

மீன்பிடி தொழிலை நம்பி இப்பகுதி மக்களின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல்-டீசல் வழங்கவில்லை. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களை ஏமாற்றி வருகிறது. அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மீனவர்கள் மீது எனக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. அவர்களின் வாழ்க்கை தரம் உயர ஆட்சியில் இருப்பவர்கள் எதுவும் செய்யவில்லை. ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வது வாடிக்கையாக உள்ளது. இதற்கு மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்கிறார்கள் என்று காரணம் மட்டும் சொல்கிறார்கள்.

கடலில் வாழும் மீன்களுக்கு எல்லை கிடையாது. ஆனால் அந்த மீன்களை பிடிக்கச் செல்லும் மீனவர்களை மட்டும் எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறி இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்கிறது. தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்க்கிறதே தவிர, நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க - அ.தி.மு.க. கட்சியினர் மாறிமாறி அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை ஏதும் எடுத்தது போல் தெரியவில்லை.

தேர்தல் கூட்டணி பற்றி என்னிடம் பேசினார்கள். 15 சீட்டும், பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் நான் விலைபோகவில்லை. நான் ஆரம்பத்திலிருந்தே கூட்டணி கிடையாது என்பதை கூறிவந்தேன். அதில் உறுதியாகவும் உள்ளேன்.

மக்களுடனும், ஆண்டவனுடனும்தான் எனது கூட்டணி. நான் மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

தி.மு.க - அ.தி.மு.க. கட்சிகள் மக்களுக்கு தேவையான எந்த உருப்படியான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக ஊழலையும், லஞ்சத்தையும் வளர்த்துள்ளார்கள்.

அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தி அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். லஞ்சத்தையும், வறுமையையும் ஒழிப்போம் என்று யாரும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆனால் வறுமையையும், லஞ்சத்தையும் ஒழிப்போம் என்று தே.மு.தி.க. கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த நீங்கள் மட்டும் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகிறீர்கள். உங்களைப் பற்றி நினைக்காதவர்களுக்கு எதற்கு ஓட்டுப்போடுகிறீர்கள். இதுவே அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சரியான தருணம். இந்த முறை உங்களுடன் கூட்டணி வைத்துள்ள எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். தே.மு.தி.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

பின்னர் கூட்டப்புளியில் இருந்து புறப்பட்டு செட்டிகுளம் கிராமத்திற்கு சென்றார். அங்கு கட்சி தொண்டர்கள் விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் பேசியதாவது:-

தேர்தலில் 40 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் பாராளுமன்றத்தில் நமது குரல் ஓங்கி ஒலிக்கும். நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறும். நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து உள்ளது என்று சொல்கிறார்கள்.

இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளம், கூத்தங்குளி ஆகிய ஊர்களுக்கு சென்று திறந்த வேனில் நின்றபடி நெல்லை வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். மதியம் 1.30 மணிக்கு திசையன்விளைக்கு வந்த விஜயகாந்த் மெயின்ரோட்டில் கொளுத்தும் வெயிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தலை முதன் முறையாக தே.மு.தி.க. சந்திக்கிறது. இதற்கு முரசு சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தேர்தலில் மிகப்பெரிய கட்சிகள் கூட்டணி குறித்து பேசி 15 இடங்களும், பணமும் தருவதாக சொன்னார்கள். நான் கோடிக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. கோடி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளேன்.

பெருந்தலைவர் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள். இப்போது மக்களை ஏமாற்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கிறார்கள். கவர்ச்சி திட்டம் மக்களுக்கு தேவையில்லை. மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல்படுத்தினால் போதும்.

தமிழ்நாடுதான் இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் மாநிலம் ஆகும். 40 தொகுதிகளில் வெற்றி பெறும் போது நாம் கைகாட்டுகிறவர்தான் பிரதமர். இது டெல்லிக்காக நடைபெறும் தேர்தல் என்று வேறு யாருக்காவது ஓட்டு போடாதீர்கள். சட்டப்பேரவை தேர்தலைப் போன்று இது அல்ல என்று நினைத்துவிடாதீர்கள்.

தற்போது தேசிய கட்சிகள் மாநில கட்சிகளையே நம்பி உள்ளன. பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 இடங்களைத்தான் கொடுப்போம் என்கிறார்கள். இதுவா தேசிய கட்சி. இந்த தேசிய கட்சி உங்களுக்காக எந்த நன்மையாவது செய்துள்ளதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே மின்சாரத்திற்கும், கோர்ட்டுக்கும் விடுமுறைவிட்ட அரசு தி.மு.க. அரசு தான். மக்களுக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏமாறக்கூடாது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். புதிய ரத்தம், புதிய சிந்தனை, புதிய கொள்கை உள்ள தே.மு.தி.க.வுக்கு ஓட்டளியுங்கள். நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் எங்களின் சட்டையைப் பிடித்து நீங்கள் கேட்கலாம்.

நான் மக்களோடு இருக்கிறேன். தற்போது விவசாயிகளுக்கு இரவில் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. பகலிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

முன்னதாக நேற்று காலை 10.45 மணிக்கு ஆரல்வாய்மொழியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் விஜயகாந்த் பேசியதாவது:-

நான் எம்.ஜி.ஆர். ரசிகன். அவர் வழியிலேயே நடப்பேன். ஜானகி எம்.ஜி.ஆர். நடத்தும் காதுகேளாதோர் பள்ளிக்கு வேறு யாராவது நிதி உதவி அளித்தார்களா? நான் அளித்து வருகிறேன். ஆனால் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். படத்தையே பயன்படுத்தக்கூடாது என்று ஜெயலலிதா சொல்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் அரசு பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 10 ஆயிரம் சாலைப்பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். வேலைநீக்கம் செய்த இவர்களா ஏழை மீது அன்பு வைப்பார்கள்? டான்சி ஊழலில் கையெழுத்து போட்டுவிட்டு கையெழுத்து போடவில்லை என்கிறார். இவர்களா ஏழைகளை காப்பாற்றுவார்கள்?


அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பா.ஜனதாவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து பதவியை அனுபவித்துவிட்டு பா.ஜனதாவை மதவாத கட்சி என்று சொல்கிறார்கள். மக்களை மிஞ்சி யாரும் இல்லை. மக்கள் ஓட்டுப் போட்டால்தான் மந்திரி. மக்களை மதிக்க தெரியாதவர்களை மந்திரியாக தேர்ந்து எடுக்காதீர்கள். எனவே, ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என்று உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் பேசினார். மேலும்......

பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: உடல் சிதறி 50 பேர் பலி

இன்று கைதாகிறார் வருண் காந்தி?

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...