
சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் ரோடு சென்னீர்குப்பம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்க துகள்கள் ரோட்டில் சிதறி கிடப்பதாக நேற்று காலை 11 மணி அளவில் தகவல் பரவியது. தங்க தகடுகளும், தங்க துண்டுகளும் ஆங்காங்கே ரோட்டின் இருபுறமும் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. வருமானவரி சோதனைக்கு பயந்து தங்கத்தை லாரியில் கொண்டுவந்து நடு ரோட்டில் போட்டுவிட்டு போய்விட்டதாகவும் சிலர் பேசிக்கொண்டார்கள்.
இந்த தகவல் பரவிய சிறிது நேரத்தில் மதுரவாயல், வேலப்பன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கத்தை சேகரித்து அள்ளிச் செல்வதற்காக மூச்சு இரைக்க ரோட்டுக்கு ஓடி வந்தனர்.
இதனால், வேலப்பன்சாவடியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் ரோடு சென்னீர்குப்பம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டில் கூட்டம் அலை மோதியது. பொதுமக்கள் ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தங்க நிற துகள்களை உண்மையான தங்கம் என்று கருதி எடுத்து மடியிலும், பைகளிலும் போட்டு நிரப்பினார்கள். சிலர் ரோட்டில் கிடந்த மணலை சல்லடை போட்டு அரித்து அதில் கிடைத்த தங்கநிற துகள்களை சேகரித்தனர். ஆரம்பத்தில் காலை 11 மணி அளவில் தங்க வேட்டைக்கு வந்தவர்களுக்கு 20 கிராம் அளவில் தங்க கட்டி போன்ற துகள்கள் கிடைத்தன.
No comments:
Post a Comment